முந்தைய பதிவின் தொடச்சி...
(மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது)
அசரீரி : ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ...
ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ... ஆரீரரோ...
உன்
பாட்டன் அடிச்ச பறை
ஓட்டை விழுந்துபோய்
ஓட்டை விழுந்த பறை
ஓட்டுமேலே காயுதய்யா !
வயோதிகன் : யார் அது.... யார் அது.... எங்களின் பழங்கதையை எங்களின் சொந்த ராகத்திலேயே பாடுவது யார். . . யார் . . .
(சுற்றும் முற்றும் தேடுகிறான்)
அசரீரி : பலமான சிரிப்புச் சத்தம் எதிரொலிக்கிறது) என்ன பெரியவரே ! வந்த வேலையை மறந்து சுகமான உறக்கமா?
வயோதிகன் : யார் நீ... யார் நீ... என் பரம்பரைக் கதையைப் பாடுகிறாயே... யார் நீ...
அசரீரி : நான் மூட்டைப் பூச்சி. உங்களால் நசுக்கப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன்களில் ஒன்று. இதோ உனக்குப் பக்கத்தில் தொங்குகிறதே வாயிற்காவலின் அங்கி அதிலிருந்துதான் பேசுகிறேன்.
வயோதிகன் : (அந்த அங்கியை எடுத்து புரட்டிப் பார்க்கிறான்) ஏ... மூட்டைப் பூச்சியே.. பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அற்பம் நீ. என்னை ஏளனம் செய்கிறாயா ?
அசரீரி : வாயிற்காவலனிடம் காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாயா ? (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது ! (ஏளன சிரிப்புச் சத்தம் உயர்ந்து அடங்குகிறது)
வயோதிகன் : என் நிலைமை உனக்கும்கூட ஏளனமாகத் தெரிகிறதா ? அது சரி.... என் பாடல் உனக்கு எப்படித் தெரியும் ?
அசரீரி : உனக்கும் வாயிற்காவலனுக்கும் சம்பாஷணைகளை தினம் தினம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறேன். அவன் உன்னைத் திருப்பி அனுப்பும் போதெல்லாம் இந்தப் பாடலைத்தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருகிறாய்.
வயோதிகன் : நீதி என்பது நிச்சயம் எல்லோரும் எப்போதும் சென்று பார்க்கக்கூடிய ஒன்றுதானே ? ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா? அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா? அல்லது அவன் மனதையாவது மாற்றக்கூடாதா ?
அசரீரி : அதிர்ஷ்டத்தையும் சிபாரிசையும் நம்பி உங்களின் ஆணிவேரை இழந்து விட்டீர்களே. உன் வாழ் நாளில் இதுவரை எப்போதாவது, எங்கேயாவது எதிர்கேள்வி கேட்டதுண்டா ? எனக்கு இப்போதெல்லாம் மனித ரத்தம் ருசிப்பதில்லை. மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.
வயோதிகன் : அப்படியென்றால்.... மனிதன் இறந்துவிட்டானா ?
அசரீரி : இல்லை... எல்லா இடங்களிலும் கையேந்தியபடியே செத்துக் கொண்டிருக்கிறான்.
வயோதிகன் : ஏ.... மூட்டைப் பூச்சியே... நீ என்னைக் குழப்புகிறாய்.
அசரீரி : எப்போதெல்லம் உங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், "இனியும் இது நீடிக்கக் கூடாது" என்று. வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறீர்கள், ஒரு துண்டு துணியோடு. நல்லது. துண்டு துணி சரிதான். ஆனால் முழு ஆடை எங்கே ? எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே ? எதிர் கேள்வி கேட்டதுண்டா ? உங்கள் இனத்தில் ரோஷமுள்ள ஒரு கவிஞன் கேட்டதைத்தான் நான் திருப்பிக் கேட்டேன். (ஏளனமான சிரிப்பு பலமாகக் கேட்கிறது) (சிரித்தவாறே) மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.
( சிரிப்பு தொடர்கிறது)
வயோதிகன் : போதும்.... போதும்... நிறுத்து....
(யோசித்தபடி அமர்கிறான். பின் மெல்ல எழுந்து முணுமுணுத்தபடி கோட்டை வாயிலை அடைகிறான். வாயிற்காவலனும் வயோதிகனும் சைகையினாலேயே விவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது)
வாயிற்காவலன் : (சத்தமாக) ...... நிறுத்து ! என்ன வேண்டும் என்கிறாய் இப்போது ? உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது.
வயோதிகன் : எல்லோரும் நீதியைக் காணத்தான் போராடுகிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் என்னைத்தவிர வெறு யாரும் இந்த வழியே உள்ளேபோக அனுமதி கேட்டு வரவில்லையே.
வாயிற்காவலன் : வேறு யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது (பலமாகச் சிரிக்கிறான்). ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்...(சிரிப்பு) உனக்கான இந்தக் கதவு இதுநாள் வரை திறந்துதானே இருந்தது. உள்ளே எந்தப் பலசாலியும் இல்லை. உண்மையில் என்னைவிட நீதான் பெரிய பலசாலி. ஆனால்... உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்.(சிரிப்பு). போ...போ... கதவை மூடப்போகிறேன்.
(அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்துகிறான்)
வயோதிகன் : ஏ... மூட்டைப் பூச்சியே... எங்கே போய்விட்டாய்.... இருக்கியா...
என்
நெஞ்சில் அடிச்ச பறை
நின் காதில் கேக்குதில்லே
சாவை அடவாக்கி
சதிராடி மகிழ்ந்திடுவாய்
(பாடலைப் பாடியவாறு கீழே வீழ்கிறான்)
- நிறைவு -
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment