Tuesday, October 23, 2007

நீதியின் முன்

நீதியின் முன்
நவீன நாடகம்

ஃபிரான்ஸ் காஃப்காவின்
சிறுகதைத் தழுவல்

ஆக்கம் : மகரந்தன்


காட்சி : 1
இடம் : கோட்டை வாயிலின் முன்புறம்
நடிகர்கள் : 1, இளைஞன், 2. வாயிற்காவலன்

(கோட்டை வாயிலின் முன் உள்ள ஆராய்ச்சி மணியினை ஓங்கி ஓங்கி அடிக்கிறான் ஓர் இளைஞன். ஆராய்ச்சி மணியின் நாவு அறுந்து கீழே விழுகிறது. அதனோடு சேர்ந்து அவனும் விழுகிறான்)

இளைஞன்: ஓ. . . ஆராய்ச்சி மணியின் நாவும் அறுந்துவீழ்ந்து விட்டதே. இதுவரை யாரும் வரவில்லையே. அப்படியானால் நான் நீதியைத் தரிசிக்கவே முடியாதா?
(கோட்டையின் கதவு திறக்கப்படுகிறது) யாரோ வருவதுபோல் தெரிகிறதே. யார் அது? வாயிற் காவலனா?

வாயிற்காவலன்: (அதிகாரத் தோரணையில்) யார் நீ? என்ன வேண்டும்? எதற்காகக் கோட்டையின் தூக்கத்தைக் கெடுத்தாய்?

இளைஞன் : ஐயா! நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். இதுவரையில் சந்தித்தது எல்லாம் அநீதியைத்தான். என் வாழ்நாளில் ஒருமுறையாவது நீதியைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் இங்கு வந்தேன். என்னை அனுமதிக்க முடியுமா?

வா. காவலன்: (பலமாகச் சிரிக்கிறான்) நீதியைத் தரிசிப்பது என்பது அவ்வளவு சுலபம் என்றா நினைத்து வந்தாய்? (மேலே இரு கைகளையும் உயர்த்தி) கடவுளை நேரில் தரிசிப்பதற்கு ஒப்பானதல்லவா அது! சரி. . . சரி. . . பரிந்துரைக் கடிதம் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறாயா?

இளைஞன் : பரிந்துரைக் கடிதமா? அது எதற்கு? அப்படி ஏதும் என்னிடம் இல்லையே. ஆனால் என்னிடம் நேர்மை இருக்கிறது.

வா. காவலன் : நேர்மையா ! (ஏளனமாகச் சிரிக்கிறான்) இந்த தேசத்தில் மூச்சு விடுவதற்குக்கூட யாராவது முக்கிய நபர் பரிந்துரை செய்திருக்க வேண்டும். உனக்குத்தான் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. . . போ. . .போ. . . என் நேரத்தை வீணடிக்காதே.

இளைஞன் :
ஐயா ! தயவி செய்தை என்னை எப்படியாவது அனுமதியுங்கள்.
(கெஞ்சுகிறான். வாயிற்கதவின் உள்ளே எட்டிப் பார்க்கிறான்)

வா. காவலன் :
என்ன உள்ளே எட்டிப் பார்க்கிறாய்? (கிண்டலாகச் சிரித்தவாறே) அவ்வளவு ஆர்வமா? அவ்வளவு ஆர்வம் இருந்தால் என் தடையை மீறி உள்ளே போய்ப் பாரேன். ஆனால் ஒன்று. நான் பலசாலி. இத்தனைக்கும் வாயிற்காவலர்களில் கடைசி ஆள் நான்தான். உள்ளே ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரு வாயிற்காவலன் இருப்பான். ஒவ்வொருவனும் முன்னவனைவிட பலசாலியாக இருப்பான். மூன்றாவது வாயிற் காவலனே மிகப் பலசாலியானவன்; பயங்கரமானவன். அவன் முகத்தை நானேகூட ஏறிட்டுப் பார்த்ததில்லை. அவ்வளவு கொடியவன்.

இளைஞன் :
ஐயா ! உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவன் நான். நீதியைத் தரிசிப்பதில் இவ்வளவு சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. ஆனால் வந்துவிட்டேன். (சற்று யோசிக்கிறான்) வழிப்பயணத்திற்காகக் கொண்டு வந்த பொருட்களையும் கையிலுள்ள பணத்தையும் தருகிறேன். வைத்துக் கொண்டு எப்படியாவது அனுமதி வாங்கித்தர முடியுமா?

வா. காவலன் : ம் . . . அது சாத்தியம் தான். ஆனால் இப்போது முடியாது. சரி. . . அந்தப் பொருட்களையும் பணத்தையும் இப்படிக்கொடு. ஆனால் ஒன்று. இதை நான் லஞ்சமாகப் பெற்றுக் கொள்வதாக நீ நினைத்துவிடக் கூடாது. நாம் எதையாவது செய்யாமல் விட்டுவிடோமோ என்று நினைத்து பின்னால் நீ வருந்தக் கூடாதே என்றுதான் இதை நான் வாங்கிக்கொள்கிறேன். அந்தப் பொருட்களை இப்படிக் கொடு. அங்கே உட்கார். அனுமதி வரும்வரை அதுதான் உனக்கு இடம்.

(அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் சென்று அமர்கிறான் அந்த இளைஞன். பின்னர், உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே ஒரு பாடலைப் பாடுகிறான்)

இளைஞன்:
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ !
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ !
என்
பாட்டன் அடிச்ச பறை
ஓட்டை விழுந்து போய்
ஓட்டை விழுந்த பறை
ஓட்டு மேலே காயுதய்யா !

உட்கார்ந்தவாறே மெல்லத் திரும்பி கோட்டை வாயிலைப் பார்க்கிறான். எழுந்து வாயிலுக்குச் செல்கிறான்.

இளைஞன் : ஐயா. . . ஐயா. . .!

வா. காவலன் : ( உள்ளே இருந்து வந்து. . .) என்ன? என்ன வேண்டும்?

இளைஞன்: நான் உள்ளே போகலாமா?

வா. காவலன்: என்ன அவசரம்! அனுமதி வந்ததும் நானே சொல்கிறேன். போ. . . போய் உட்கார்.
(திரும்பி வந்து அமர்ந்து பாடலைத் தொடர்கிறான். . .)

என்
அப்பன் அடிச்ச பறை
அக்ககாய் கிழிந்துபோய்
அக்கக்காய் கிழிந்த பறை
ஆணியிலே தொங்குதய்யா!

(எழுந்து மீண்டும் கோட்டை வாயிலுக்கு விழைகிறான். தற்போது நடுத்தர வயதை அடைந்த தொற்றம்)

இளைஞன் : ஐயா . . . ஐயா . . .!

வா. காவலன் : (சலிப்புடன்) என்ன?

இளைஞன் : வயதாகிக் கொண்டே போகிறது. என் காலமே முட்ந்துவிடும்போல் இருக்கிறதே?

வா. காவலன் : வயதானால் என்ன? உனக்கான அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

(மீண்டும் தனது பழைய இடத்திற்கே வருகிறான். வரும் போது நடையில் தளர்ச்சியும் தொற்றத்தில் முதுமையும் வெளிப்படுகிறது. வந்து அமர்ந்து விட்ட இடத்தில் இருந்து பாடலை மீண்டும் தொடர்கிறான்)

என்
அண்ணன்மார் அடிச்ச பறை
தோல் கிழிந்து கோவணமாய்
கோவணத் தோரணங்கள்
கூரையிலே காயுதய்யா !

(இம்முறை தலையை மட்டும் மெல்லத் திருப்பி வாயிற்கதவை பார்க்கிறான். முதுமை காரணமாக இழுந்திருக்க முடியவில்லை. தட்டுத்தடுமாறி எழுந்து வாயிற்கதவை நோக்கிப் போகிறான். வயோதிகத் தன்மை குரலிலும் தெரிகிறது)

வயோதிகன் : ஐயா. . வயதும் ஆகிவிட்டது. நீதியைத் தரிசிக்கவே முடியாதா?

வா. காவலன் : இனிமேலும்கூட அது சாத்தியம்தான். ஆனல் அது உன் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

வயோதிகன் : ஒன்றும் புரியவில்லையே!

வா. காவலன்: எதுதான் புரிந்தது. போய் உட்கார். போ. . .போ. . . ( விரட்டுகிறான்)

(முணுமுணுத்தவாறு தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்து தனது பழைய இடத்தில் படுத்துவிடுகிறான்)

. . . . தொடரும்